Monday, 5 August 2013

சமவுரிமை போராளி அய்யன்காளி

சமவுரிமை போராளி  அய்யன்காளி







அய்யன் காளி திருவிதாங்கூர் மகானத்தில் தலித் சமுதாய விடுதலைக்காக பாடுபட்ட தலைவர். இவர் 28 ஆகத்து, 1863ல் திருவிதாங்கூரில் (கேரளா)திருவனந்தபுரத்திலிருந்து 13 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள வெங்கனூரில், பெருங்காட்டுவிளா என்ற ஊரில் 7 பிள்ளைகளில் ஒன்றாக கூலி விவசாய குடும்பத்தில் அய்யன் என்பவருக்கு மகனாக பிறந்தார் அய்யன்காளி. இளவயதில் கட்டுடலும், அழகும், வலிமையும் நிறைந்தவராகவே வளர்ந்தார். அய்யன்காளி சிறுவனாக இருக்கும் போது தனது குடும்பத்தினரும், உறவினர்களும் உரிமை மறுக்கப்பட்டு அடிமைகளாக நடத்தப்படுவதை உணர்ந்தார். புலையர் சாதியில் பிறந்த அவர்களுக்கு சாலையில் நடக்க அனுமதியில்லை. உடலை மறைக்க நல்ல உடையணிய அனுமதி மறுக்கப்பட்டது. செருப்பு போட அனுமதியில்லை. தலைப்பாகை கட்டக்கூடாது என பல அடக்குமுறைகளை
அனுபவித்தனர். பார்ப்பனீயவர்ணாசிரம அடுக்கில் கீழே இருந்ததால் புலையர்களை ஏரில் பூட்டி வயலை உழக் கட்டாயப்படுத்தினர். நாயர்களும்நம்பூதிரிகளும் இவர்களை அடிமைகளாக நடத்தினர். அக்கால கட்டத்தில் தலித்துகளின் மீது கல்வி உரிமை மறுப்பு, பொதுத் தெருவில் நடமாடும் சுதந்திரம் இல்லாமை,பெண்கள் மேலாடை அணிய அனுமதிக்கப்படாமை போன்ற கொடுமைகள் உயர் சாதி மக்களால் நிகழ்த்தப்பட்டது 

இளமைப் பருவம்:

நிலங்களை சீர் படுத்தியதற்காக ஐயன் காளியின் தந்தை அய்யனுக்கு ஒரு சிறிய நிலத்தை அவரது நாயர் முதலாளி கோவிந்தபிள்ளை வழங்கினார். இது அன்றைய நாயர் சமுதாயத்தில் சலசலப்பான எதிர்ப்பை ஏற்படுத்தியது. ஐயன் காளி இளமைப் பருவத்தில் நல்ல உயரத்துடன் கட்டுடலுடன் காணப்பட்டார். தன் நன்பர்களுடன் தன் வீட்டில் கால்பந்து விளையாடிக் கொண்டிருக்கும் போது பந்து அடிக்கடி பக்கத்திலிருக்கும் நாயர் வீட்டின் கூரையில் விழுந்தது. அதைக் கண்ட அந்த நாயர் அவரிடம் இனிமேல் நாயர் இளைஞர்களுடன் விளையாடக்கூடாது என்று எச்சரித்தார். இது அவரிடம் மிகப் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியது. அவர் இனிமேல் நாயர்களுடன் விளையாடுவதில்லை என்று உறுதி எடுத்துக் கொண்டார். அன்று முதல் விளையாடுவதை விட்டுவிட்ட ஐயன் காளி ஆழமான மௌன சிந்தனையில் மூழ்கினார். தாழ்த்தப்பட்டு சுரண்டப்பட்ட மக்களை ஒருங்கிணைத்து சமுதாய விடுதலை பெறும் போராளியாக உருவெடுத்தார் அய்யன் காளி. இதற்காகவே அவர் பல நாடகங்களை எழுதி அரங்கேற்றினார். இவை இந்து புராணங்களை ஆராய்ந்து அதில் சமுதாய விடுதலைக்கான தரவுகளை வடித்தெடுத்து உருவாக்கப் பட்டதாகும். உதாரணமாக கக்கல ரிஷி நாடகம், அரிச்சந்திர நாடகம், வள்ளி சுப்பிரமணியர் திருமணம் ஆகிய நாடகங்கள் இவற்றில் அடங்கும். இவற்றினை நாடெங்கும் தாழ்த்தப்பட்ட மக்களிடையே நடத்தி கட்டுக்கடங்காத விழிப்புணர்வை ஏற்படுத்தினார் ஐயன் காளி. 1888 ல் செல்லம்மா என்பவரை திருமணம் செய்து கொண்டார். அவர்களுக்கு ஏழு குழந்தைகள் பிறந்தன. தங்கம்மா என்ற பெயரில் அறியபடுகின்ற ஒரே மகள் கேசவன் சாத்திரி என்பவருடன் மணமுடிக்கப்பட்டர். கேசவன் சாத்திரி பின்பு கேரள சட்டசபையின் சபாநாயகராக தேர்ந்தெடுக்கப்பட்டார்.

பள்ளி நுழைவுப் போராட்டம்:


தலித்களை பள்ளிக்கூடத்தில் நுழையக்கூடாது என்ற நிலையைத் தகர்க்க 1904 ம் ஆண்டு ஐயன் காளியின் தலைமையில் கல்வி நிலையம் ஒன்றை அமைத்தனர். அக்காலகட்டத்தில் தலித்களுக்கு அரசாங்க கல்வி நிலையங்களில் அனுமதி மறுக்கப்பட்டிருந்தது. கரும்பலகைகள் எதுவுமின்றி மணலில் பாடம் சொல்லிகொடுக்கும விதமாக இப்பள்ளி செயல்பட்டது. இதன் மூலம் மறைமுகமாகக்கூட தலித்துக்கள் கல்வி கற்கக் கூடாது என்ற நிலை அகற்றப்பட்டது. வெங்கனூரில் அமைக்கப்பட்ட இக் கல்வி நிலையமே தலித்துகளுக்காக முதன் முதலில் அமைக்கப்பட்ட கல்வி நிலையமாகும். 1914 இல் கல்வித்துறை தான் வெளியிட்ட தாழ்த்தப்பட்ட மக்களுக்கான உத்தரவு செயல்படுத்தப் படுகிறதா என பார்க்கலாயிற்று. புலையக்குழந்தைகள் நுழையும் பள்ளிகளில் மேல்சாதிக் குழந்தைகள் கூட்டம் கூட்டமாக வெளிநடப்பு செய்தனர். இதனையடுத்து மிச்சல் குழந்தைகள் வெளியேறுவதற்குக் தக்க காரணங்கள் தரப்பட்டு இருந்தால் அவற்றை ஆவணப் படுத்துமாறு தலைமை ஆசிரியர்களைப் பணித்தார். இந்நிலையில் 1905 இல் அவர் ஏற்கனவே நிறுவிய பள்ளிக்கு இப்போது அரசு அங்கீகாரம் தரப் பட்டது. பரமேஸ்வரன் பிள்ளை என்பவர் ஆசிரியராக இருக்க முன்வந்தார். ‘ஹரி ஸ்ரீ ஓம்’ எனச் சொல்லிப் பாடம் நடத்தத் தொடங்கியது போது, மேல் சாதியினர் பள்ளியைத் தாக்கின. அன்று இரவு பள்ளி தீக்கிரையானது. இதன் பிறகு ஒரு மாபெரும் இயக்கமாக மாறி, அனைவருக்குமான பள்ளிகள் பல இடங்களில் எழுந்தன.



No comments:

Post a Comment